Saturday, October 2, 2010

நீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 4

4. தன்நம்பிக்கை - பதட்டம்.


ஒரு மான் பிரசவ வலியில் துடித்தது. அது குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்றது. தனது குட்டிகளை நலமாக பிரசவித்தது. சிறிது காலம் அந்த மானும் தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே வசித்து வந்தது. வெகு நாட்களாக வெளியே சென்றிருந்த சிங்கம் அந்த குகைக்கு திரும்பி வந்தது. குட்டிகளை அழைத்துக் கொண்டு ஓட முடியாது என்பதை உணர்ந்த மான் உடளே தன் குட்டிகளிடம்

" சிங்கம் குகைக்கு அருகில் வந்ததும், எல்லோரும் சத்தமாக எனக்கு சிங்கம் கறி வேண்டும் என்று கத்துங்கள்" என்று சொன்னது.

சிங்கம் குகை அருகில் வந்த உடன் குட்டி கத்தியதை குகையின் எதிரொலியால் பயங்கரமாக கேட்ட சிங்கம் நம்மைவிட பலசாலியான மிருகங்கள் உள்ளே இருப்பதாக நினைத்து ஓட்டமெடுத்தது.

ஒரு நரி, ஓடி வருகிற சிங்கத்தை பார்த்து,

" ஏன் ஓடுகிறீர்கள் ? " என்று கேட்க,

" என்னுடைய குகையில் வேறு ஏதோ மிருகங்கள் குடியிருக்கின்றன. எவை என்னைக் கொள்வதற்கு காத்திருக்கிறது " என்று சிங்கம் சொன்னது. அதை கேட்ட நரி,

" வேறு மிருகங்கள் இல்லை. மானும் அதன் குட்டிகளும்தான் இருக்கிறது. எனக்குத் தெரியும், வாருங்கள் பெரிய மானை நீங்கள் சாப்பிடுங்கள். குட்டிகளை நான் சாப்பிடுகிறேன்." என்றது. அதற்கு சிங்கம்,

" சரி வருகிறேன். ஆனால் நீ ஏற்கனவே என்னை ஏமாற்றியவன், அதனால் உன்னுடைய வாலையும் என்னுடைய வாலையும் முடிந்து கொண்டு செல்வோம் " என்று சொல்லி அதன் வாலைத் தன்னுடைய வாலுடன் பிணைத்துக் கொண்டது. சிங்கத்தை நரி அழைத்து வருவதைப் பார்த்த மான், அருகில் இரண்டும் வந்த உடன் தன் குட்டிகளிடம் சத்தமாக,

" கவலைப்படாதீர்கள் பிள்ளைகளே, இன்று நாம் எப்படியும் சிங்கக்கறி சாப்பிடுவோம், அதை எப்படியாவது அழைத்து வந்து விடுவேன் என்று நரி அண்ணன் சொல்லிச் சென்றுள்ளது. நிச்சயம் நரி அண்ணன் சிங்கத்துடன் வரும் " என்று சொன்ன உடன்,


இதை கேட்ட சிங்கம் தலைதெறிக்க ஓடியது. அதன் வாலோடு தன் வாலைப் பிணைத்திருந்த நரி அடிபட்டு இறந்தது.

- இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது, எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும் முயற்சியையும் விட்டுவிட கூடாது. ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலை படுவதாலோ வருத்தப் படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப்போவதில்லை. அதை நினைத்து கவலைப் படுவதற்கு பதிலாக அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தால் நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்.

உதாரணம், ஒரு ஒருவழி சாலையில், நீங்கள் இரண்டு சக்கர வாகனம் ஓட்டி கொண்டு செல்கிறீர்கள், அப்போது எதிரே பஸ் அல்லது லாரியோ எதிரே வேகமாக வருகிறது சில நொடிகளில் விபத்து ஏற்பட கூடிய சூழ்நிலை, இந்த தருனத்தில் நீங்கள் அய்யோ என்று பதறினால் ஒன்றும் நிகழப்போவதில்லை உங்களுக்கு நன்மையாக, ஆனால் உங்களின் கவனத்தை எதிரே வருகிற வாகத்தை எப்படி தவிர்த்து ஒதுங்கி போவது என்று சிந்தித்து அதன்படி உங்கள் வாகத்தை செலுத்தினால் அந்த விபத்திலிருந்து தப்பலாம்.

ஒரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்தால் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று சிந்திக்க வேண்டும் தன் நம்பிக்கையுடன். எனக்கு அது போல சூழ்நிலை ஏற்படுவதுண்டு என் மனைவி அய்யயோ இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்படுவதுண்டு நான் அதை பற்றி சிந்திக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து அதன்படி செயல்பட ஆரம்பித்து விடுவேன். பிறகு அந்த சூழ்நிலை மாறியதும் என் மனைவியிடம் சொன்னால் அதற்கு நீங்கள் ரொம்ப அழுத்தம் என்பார்கள்.

எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே அதிலிருந்து தப்ப தன்னம்பிக்கையும், பதட்டப்படாமல் இருந்தாலே பாதி வெற்றி, நாம் பயப்படாமல் எதிரில் உள்ளவர்களை சமாளித்தால் மீதி வெற்றி.

தன்னம்பிக்கை வேண்டும் பதட்டம் வேண்டாம்... வெற்றி உங்களுக்கே

வெற்றி இன்னும் தொடரும்...

Thursday, November 26, 2009

நீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 3

திட்டமிடுதல்

திட்டமிடுதல் என்பது எந்த விசயத்திற்கும் மிக முக்கியமாகும்.

முன்னொரு காலத்தில் அந்த நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். அரண்மனைக்குச் சென்று 'எனக்கு அரசர் பதவி வேண்டும்' என்று கேட்டால் போதும், அரியணையில் அமர்த்தி முடிசூட்டிவிடுவார்கள். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

மேற்கண்ட கதையை கவனியுங்கள்!

''ஐந்து ஆண்டுக்குப் பிறகு காடும் சாவும்தான் விதி'' என்ற விதியை மதியால் எப்படி மாற்றினான்?

வறுமையும், நோயும், மன உளைச்சலும், அவமதிப்பும்தான் நம்முடைய விதியா?

பசி, பிணி, மூப்பு, சாக்காடுதான் தலையெழுத்தா? எப்படியும் மரணம்தான் என்பது ஆண்டி முதல் அரசன் வரை அனைவருக்கும் வகுக்கப்பட்ட விதியாக இருந்தாலும், இறுதிக் காலத்தை ஏன் இறுகிப்போன காலமாகக் கழிக்க வேண்டும்?

அதற்காகத் துல்லியமாகத் திட்டமிடுங்கள்.

எப்போது செய்ய வேண்டும் என்று அழகாகத் திட்டமிடுங்கள்.

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !

Friday, October 30, 2009

நீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 2

2. குறையை நிறையாக்க...
------------------------------------------------------------------------------
ஒரு கிறித்துவ தேவாலயத்தில் புதிதாக ஒரு மதகுரு பொறுப்பேற்றார். அவர் நிர்வாகத்தை முற்றிலும் மாற்றி அமைக்க முடிவு செய்தார் தேவாலயத்தில் பணிபரியும் எல்லோருக்கும் எழுதப்படிக்க தெரிய வேண்டும் என்று எதிர் பார்த்தார். கையெழுத்துக் கூட போடத் தெரியாதவர்களை வேளையைவிட்டு நீக்கிவிடுவேன் என்று எச்சரித்தார். கொஞ்ச அவகாசமும் கொடுத்தார்.

அங்கு கூட்டிப் பெருக்கும் ஏழைத் தொழிலாளிக்கோ என்ன முயன்றும் எழுதப்படிக்க வரவில்லை. கையெழுத்து கூட போட் முடியவில்லை. எவ்வளவு கெஞ்சியும் மதகுரு மசியவில்லை. வேலையை விட்டு நீக்கிவிட்டார். மிகுந்த வருத்ததுடன் சோர்வாகத் தேவாலயத்தைவிட்டு வெளிய வந்த ஏழைக்கு வேதனை. சொல்லமுடியாத வேதனை. பலவருட பந்தம் பறிபோய்விட்டது. அழுதபடி திரும்பி திரும்பி தேவாலையத்தை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார். மனவேதனை மறைய ஒரு சிகரேட் பிடிக்கலாம் என்று நினைத்தால் பாக்கெட்டில் ஒரு சிகரெட் இல்லை. பக்கத்தில் பார்த்தால் சிகரெட் கடைகூட ஓன்றும் இல்லை. நெடுந்தூரம் நடந்துவிட்டார் ம்ஹ�ம்... சிகெரட் கடையே இல்லை.

பட்டென்று அவருக்கு பொறித் தட்டியது. " நாம் ஏன் இங்கு சிறிய பெட்டிக் கடை வைக்கக் கூடாது... இங்கே வருகிற பலபேருக்கு பயன்படுமே" என்று முடிவு செய்தார். வெளியே அனுப்பும் போது மதகுரு கொடுத்த சிறிய தொகையை முதலாக்கி சிகரெட்டுடன் மற்றும் பல பொருட்களுடன் கடை ஆரம்பித்தார். வியாபாரம் அமோகமாக நடந்தது... சிறிது காலத்தில் கடையை விரிவுபடுத்தி வியாபாரத்தை பெரியதாக்கினார். சில மாதங்களில் பெரிய பணக்கரார் ஆகிவிட்டார்.

இவரிடம் பணம் இருப்பது தெரிந்து ஒரு வங்கியின் மேலாளர் தங்கள் வங்கியில் சேமிக்கும்படியும் வட்டி கிடைக்கும் என்றும் சொல்லி சம்மதிக்க வைத்தார். முடிவில் சேமிக்க விண்ணப்பபடிவங்கள் நிறைவு செய்துவிட்டு பணக்காரரிடம், " கையொப்பம் போடுங்கள் " என்றார். பணக்காரருக்கு வந்ததே கோபம்... நிறைய சத்தம் போட்டுவிட்டு முடிவில், தனக்கு கையெழுத்து போடத் தெரியாது என்று முடித்தார்.

வங்கி மேலாளர் " அட... கையெழுத்து கூட போடத் தெரியாமலேயே இவ்வளவு பெரிய வியாபாரியாகி விட்டீர்கள்... உங்களுக்கு அதுவும் தெரிந்திருந்தால் அடடா நீங்கள் எங்கேயோ இருந்திருப்பீர்கள்? " என்று புகழ்ந்ததும் " வாயை மூடுங்கள்.. எனக்கு மட்டும் கையெழுத்து போடத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் கூட்டி பெருக்கும் தொழிலாளியாகத்தான் இன்னும் இருந்திருப்பேன் " என்று கர்ஜித்தார்.

இது வெறும் கதையல்ல. குறைகூட ஒருநாளில் நிறைவாகலாம். நம்மில் பலருக்கு பல குறைகள் இருக்கும் அதை நினைத்து வருத்தபடுவது உண்டு. வருத்தபடுவதால் எந்த மாற்றமும் நிகழப்போதில்லை. அந்த குறையை நமது பலமாக மாற்ற என்ன செய்யலாம் என்று எண்ணி அதை செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்...


குறையை நிறையாக்கலாம்

Thursday, October 29, 2009

நீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 1

1. நம்மால் முடியும்
------------------------------------------------------------------------------

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு

" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.

அதற்கு இவர் " எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால் அவர்.

" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.

" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.

பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார்

இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?" என்றார்.

அந்த பெண்மணி " இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

- இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு. " என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும்.